ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தாமாகவே வாகனத்தை திறந்து இறங்கிச் செல்வது பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானிக்கு தனது பணி என்னவென்று புரியவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகின் முக்கிய தலைவர்கள் தாங்கள், பயணம் செய்யும் வாகனங்களின் கதவுகளை தாங்களே திறந்து கொண்டு இறங்காமைக்கு முக்கிய ஏது பாதுகாப்பு நோக்கங்களே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபுக்கள் தலைக்கணம் காரணமாக இவ்வாறு தங்களது வாகன கதவுகளை திறப்பதில்லை என நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பிரபுக்கள் நிகழ்வு ஒன்றிற்கு வரும் போது அவர்கள் வரும் நேரம் முன்கூட்டியே தெரியவந்து விடும் எனவும் இவ்வாறான நிலையில் அவர்களை படுகொலை செய்வதற்கு ஓர் சந்தர்ப்பமாக அமைந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு ஏதுவுமின்றி பிரபுக்கள் வாகனங்களை திறந்து இறங்கிச் செல்லும் போது தாக்குதல் நடத்துவது இலகுவானது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பிரபுக்கள் வாகனத்தில் இருக்கும் போது பாதுகாப்புப் படையினர் கீழே இறங்கி பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்து அதன் பின்னரே பொதுவாக பிரபுக்கள் வாகனத்தில் இருந்து இறங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்களை தெரியாத தம்பி, தங்கையர் ஜனாதிபதியின் செயற்பாட்டை புகழ்ந்து பாராட்டுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் பின்பற்றப்படும் பிரபுக்களின் பாதுகாப்பு நடைமுறைகள் தெரியாத ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பிரதானி பதவி நீக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்