தமிழகத்தின் திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் துணி துவைக்கும் போது, தண்ணீரில் மூழ்கிய சிறுமியும், அவரை காப்பாற்ற முயன்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ராஜி என்பவரது மனைவி சுமதி (38) அவரது மகள் அஸ்வதா (14), முனுசாமி என்பவரது மகள் நர்மதா, தேவேந்திரன் மகள் ஜீவிதா (14), முனுசாமி என்பவரது மனைவி ஜோதி (30) ஆகிய 5 பேரும் அருகில் உள்ள அங்காளம்மன் கோவில் குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி நர்மதா நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் பின் ஒருவராக 5 பேரும் நீருக்குள் சென்றுள்ளனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக, சிறுமி நர்மதாவோடு, அவரை காப்பாற்றச் சென்ற 5 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.இதனைக் கண்ட கரையில் அமர்ந்திருந்த சுமதியின் மகன் அஸ்வந்த் அலறியடித்தபடி கூக்குரல் எழுப்பியுள்ளார். எனினும் , அவர்கள் வருவதற்குள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் உயிரிழந்த சிறுமிகள் 3 பேர் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேரின் உடலையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தஐந்து பேர் கோவில் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.