கடந்த அரசாங்கத்தில் தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் எனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கூறியது அனைத்தும் பொய் என்பதை கடந்த எரிபொருள் விலை திருத்தம் நிரூபிப்பதாக எரிபொருள் எரிசக்தி முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அன்று எரிபொருள் பணம் எனது சட்டைப் பைக்குள் சென்றால், இன்று அதே பணம் பொறுப்பான அமைச்சர் அநுர திஸாநாயக்கவின் சட்டைப் பைக்குள் செல்ல வேண்டும் என்றார்.
எனினும், எரிபொருள் விற்பனை தொடர்பான உண்மையைப் புரிந்து கொண்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய குழுக்களால் நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்ட விடயங்களின் உண்மை மற்றும் பொய்மையை இனி மக்கள் கண்டுகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.