முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்க்ஷ தங்காலையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு வந்த பின்னர் வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக, கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரவினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வெளியாகும் முன்னரே, இவ்வாறானதொரு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொடுள்ளதாக மஹிந்த தரப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களால் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ து உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை யோசிக்காமல் அனுர அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது தவறு எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.