பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos)எனப்படும் கருப்பை நீர்கட்டி பிரச்னைக்கு ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos)எனப்படும் கருப்பை நீர்கட்டி பிரச்னையால் இன்றைய காலத்தில் அதிகளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கத்தில் மாற்றம், குறிப்பாக தவறான உணவுப்பழகத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தையே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மாதவிடாய் என்பது மாதந்தோறும் வயதுக்கு வந்த பெண்களுக்கு ஏற்படும் சுழற்று முறையிலான செயல்பாடு ஆகும். இதுவே ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றுதான் கூற வேண்டும்.
சரியாக மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது குழந்தை உண்டாவதில் பலவிதமான பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக பெண்களின் இனப்பெருக்க வயது ஏற்படும் போது இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.
அவ்வாறு கருவுற்றாலும் சினைமுட்டைகள் முதிர்ச்சியடைவதற்கு தேவையான ஹார்மோன் சுரப்பதில்லை. கருப்பையில் நீர்கட்டி உள்ளவர்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்.
பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த நீர்க்கட்டிகள் பொதுவாக இரண்டு வகைகளாகும். செயல்பாட்டு கருப்பை நீர்க்கட்டிகள் மற்றும் நோயியல் கருப்பை நீர்க்கட்டிகள். இதில் செயல்பாட்டு கருப்பை நீர்க்கட்டிகள் மாதவிடாய் சுழற்சியின் காரணமாக உருவாகிறது.
நோயியல் கருப்பை நீர்க்கட்டிகள் அசாதாரண செல் வளர்ச்சியின் காரணமாக உருவாகிறது. இரண்டு நீர்க்கட்டிகளும் பொதுவாக இடுப்பு பரிசோதனை அல்லது இடுப்பு அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியப்படுகின்றன.
இந்த நீர்க்கட்டிகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீங்கற்றதாக இருந்தாலும், அவை சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, அவற்றை சரியான நேரத்தில் சரிபார்ப்பது நல்லது.
ஆரம்ப கட்ட அறிகுறிகள்
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.
பெரியவர்களுக்கு 21 நாட்களுக்காக முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பின்போ ஏற்படும். இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பின்பு மாதவிடாய் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ஆண்களின் உடம்பில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் உடம்பில் இருப்பதால் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறியாகும்.
உச்சந்தலையில் முடி உதிர்தல் மட்டுமின்றி வழுக்கை ஏற்படுத்தும் இதற்கான அறிகுறியாகும்.
உடல் பருமனும் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை அதிகமானவர்களாக இருக்கின்றனர். ஆதலால் உடல் எடையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பதும் இதற்கான முக்கிய அறிகுறியாகும். மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும்.
மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள், தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவையும் இதற்கான அறிகுறிகளாகும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிப்பதுடன், டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பும் இதன் அறிகுறியாகும்
மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை.
எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.
மேலும் சில அறிகுறிகள்
இடுப்பு வலி என்பது கருப்பை நீர்க்கட்டிகளின் பொதுவான அறிகுறியாகும். இந்த வலியானது லேசானது முதல் கடுமையானதாகவும் இருக்கும்.
உடலுறவின் போது இடுப்பு எலும்பில் வலியும், அடி வயிற்றில் வலியும் அதிகமாக ஏற்படுகின்றது. இதனால் அசெகரியம் ஏற்படலாம்.
சிறுநீர்க் கழித்தலில் மாற்றம் அல்லது அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் (சிறுநீரை முழுவதுமாக வெளியேற்ற இயலாமை) அல்லது இடுப்பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக குடலியக்கங்களில் கடினத் தன்மை ஏற்படுதல்.
மாதவிடாய்க்காலத்தில் அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ ஏற்படும் வலி: ஒழுங்கற்ற மாதவிடாய், அசாதாரணமாக கருப்பையிலிருந்து குருதி வெளியேறுதல்.
வயிற்றில் விக்கம் மற்றும் சாப்பிட முடியாத சூழல் ஏற்படும். சிறிதளது சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.
குறித்த நீர்க்கட்டியால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம். முக்கியமாக பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்
வீட்டு வைத்தியம் என்ன?
நாம் உண்ணும் உணவில் தினமும் அதிகளவு லவங்க பட்டையை சேர்த்துக்கொண்டால் நீர்கட்டி பிரச்னைகள் குணமடையும் .
தினமும் காலையில், துளசி இலைகளை சாப்பிட்டு வருவதுடன், சுடுதண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அருந்தவும்.
அடிவயிற்றில் வலி ஏற்படும்போது வெந்நீரில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்லது. ஆளி விதை பொடியை எடுத்துக் கொள்வதும் நல்லது.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கழற்சிகாயை தினமும் மிளகுடன் சேர்த்து உண்டு வர கருப்பை நீர்கட்டிகள் கரைந்து சரியான மாதவிடாய் வருவதுடன், கருப்பை பிரச்னைகளும் குணமடையும்.