தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம்(United Kingdom) எடுத்த முடிவை இலங்கை வரவேற்றுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின், மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரிகளின் தலைமையில் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன நீதிமன்றமான, தடைசெய்யப்பட்ட அமைப்பு முறையீடுகள் ஆணைக்குழு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இங்கிலாந்து தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு இலங்கையில் சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு இங்கிலாந்திடம் விண்ணப்பித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய இராச்சியத்தில் தடைசெய்யப்படவில்லை. அது வன்முறையற்ற வழிமுறைகளின் மூலம் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர முயற்சிக்கும் காரணத்தினால் அதனை அந்த நாடு தடை செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் அணுகுமுறையும் மூலோபாயமும்,வெளிநாட்டு அரசாங்கங்களை விடுதலைப் புலிகளின் தடையை நீக்கச் செய்வதன் மூலம் அந்த அமைப்பை புத்துயிர் பெறச் செய்வதாகும் என வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.