இன்று அட்சய திருதியான சுபிட்சத்தை தரக் கூடிய அற்புதமான நாளில் எதை செய்தாலும் பெரும் என்பதால் நல்ல காரியங்கள் அனைத்தும் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.
அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதி, திருதியை திதியாகும். இந்த நாளில் சேமிப்பு பெருக வேண்டும் என்பதால் தங்கத்தை வாங்கி சேமிப்பது பலரின் வழக்கமாக உள்ளது.
நவகிரகங்களில் மங்கல கிரகங்களான குருவிற்கு உரியது என்பதால் தங்கத்தையும், சுக்கிரனுக்கு உரியது என்பதால் வெள்ளியையும் வாங்குவதை மங்களத்தின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் அனைவராலும் தங்கத்தை நினைத்த உடன் வாங்கி விட முடியாது என்பதால், தங்கம் வாங்க முடியாதவர்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் பெருகுவதற்கு சில எளிய விஷயங்களை செய்யலாம்.
சேமிப்பை துவங்க நினைப்பவர்கள் அட்சய திருதியை அன்று உண்டியல் வாங்கி வைத்து, காசு போட துவங்கலாம்.
வெள்ளி வாங்குவதாக இருந்தால் அஷ்டலட்சுமி குடம், குபேர விளக்கு ஆகியவற்றை வாங்குவது சிறப்பு
குபேர பூஜை செய்வது, மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது, குங்கும அர்ச்சனை செய்வது ஆகியவற்றை செய்யலாம். வெள்ளியில் காசு வைத்திருந்தால் அதை வைத்து மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யலாம்
தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் அட்சய திருதியை அன்று பால் வாங்கி காய்ச்சி, பால் பாயசம் செய்து மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
உப்பு, மஞ்சள், பருப்பு, பச்சரிசி போன்ற மங்கல மற்றும் தானிய பொருட்களை வாங்கி, அதில் மகாலட்சுமி நிறைந்திருப்பதாக நினைத்து, பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
ஒரு குடத்தில் தண்ணீரை பிடித்து அம்பிகையின் படத்திற்கு முன் வைத்து, அதில் சிறிது மஞ்சள், சிறிது பூ, இரண்டு காசுகள் போட்டு வைத்து வழிபடலாம். வீட்டில் குடம் குடமாக செல்வம் பெருக வேண்டும் என அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
குத்து விளக்கு இருந்தால் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து அம்பிகையை பூஜை செய்யலாம்.
தங்கம் வாங்கினால் முதலில் அதன் மீது சிறிது மஞ்சள் தண்ணீர் தெளித்து, சுவாமி சிலை அல்லது படத்திற்கு அணிவித்து விட்டு, பிறகு கிழக்கு அல்லது வடக்கு பக்கமாக திரும்பி நின்று நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
மல்லிகைப்பூ உதிரிப்பூவாக எடுத்து, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யலாம்.
அட்சய திருதியை அன்று வீட்டு வாசலில் மாவிலை கட்டலாம்.
லட்சுமி உருவம் பதித்த காசுகள், பஞ்ச பாத்திரம், குத்து விளக்கு, காமாட்சி விளக்கு போன்ற பொருட்களையும் இந்த நாளில் வீட்டில் வாங்கி வைக்கலாம்.