காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை கும்பல் வழிமறித்து மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-05-2024) வலந்தலை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், தனிநபர் ஒருவரும் மறித்து மிரட்டல் விடுத்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவருடைய பேருந்தையே இவ்வாறு வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்தானது முதன் முறையாக நேற்று காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து சேவையினை ஆரம்பித்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகர் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
மேலும், குறித்த சங்கத்தினர் நேற்று பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.
குறித்த வழித்தட பகுதியில் வசிப்பவர்களுக்கே வழித்தட அனுமதி வழங்கப்பட்டு வருவது தனியார் சிற்றூர்தி உரிமையாளர் சங்கத்தின் யாப்பு நடைமுறையாக காணப்படுகிறது.
அந்த வழித்தடப் பகுதி தவிர்ந்த பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு வழித்தட அனுமதியும் நேர அட்டவணையும் வழங்கப்பட்டமையாலேயே இவ்வாறு காரைநகர் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இருப்பினும், இவ்வாறான வரையறை இலங்கை சட்டத்தில் காணப்படாமையினால் இலங்கை போக்குவரத்து அதிகார சபையினர் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பேருந்தானது நேற்று முன்தினம் சேவையில் ஈடுபட்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த மிரட்டலை விடுத்தவர்கள் யார் என வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்