நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இணைய ஊடகமொன்றுக்கு இறப்பதற்கு முன்னர் வழங்கிய காணொளி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளியில் தனது இறப்பு பற்றிய விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் இறந்த நேற்றைய தினம் காலை இந்த காணொளி வெளியிடப்பட்டிருந்தது.
அமரர் பாலித தெவரப்பெரும தனது மரணத்தின் பின்னர் தன்னை அடக்கம் செய்யப்பட வேண்டிய சமாதியை நிர்மானித்துள்ளார்.
தனது இறுதி ஊர்வலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தமக்காக கண்ணீர் விடத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது இறுதி ஊர்வலத்தில் அழுகுரல் ஒலிக்க வேண்டியதில்லை எனவும் அதற்காக பாடல் ஒன்றை தாம் இயற்றியுள்ளதாகவும் அதனை ஒலிக்க செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது இளைய மகனிடம் சவப்பெட்டியிலிருந்து கொண்டு பேசும் வகையில் பாடல் வரிகள் இயற்றப்பட்டுள்ளன.
பிரபல சிங்களப் பாடலொன்றின் மெட்டமைப்பிற்கு பாலித தனது வரிகளை சேர்த்துள்ளார்.
“மகனே எனது சவப்பெட்டியை தூக்கிச் செல்லும் போது உனது தோள்கள் வலித்தால் பெட்டியை கீழே வைத்து விடு, உனது அன்னையின் மருந்து தூண்டுகள் என்னிடம் உண்டு அவற்றை எடுத்துச் சென்று மருந்து எடுத்துக் கொடு. இந்த காரிரூளில் நான் செல்லும் பயணத்தில், உனது அண்ணாவை காலையில் தேடிக் கண்டு பிடித்து விடுவேன் ( பாலிதவின் மூத்த மகன் நோய்வாய்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்) என பாடல் வரிகள் இயற்றியுள்ளார்.
தமது பூத உடலை தாங்கிச் செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவழித்து சவப்பெட்டி கொள்வனவு வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பூத உடலை தாங்கிச் செல்வதற்காக சவப்பெட்டியை தாமே உருவாக்கியுள்ளதாகவும், சவப்பெட்டி கொள்வனவு செய்யும் பணத்தைக் கொண்டு ஏழை பிள்ளைகளுக்கு புத்தகங்களையும், உணவையும் வழங்குமாறு வீட்டாரிடம் கோரியுள்ளதாக பாலித தெவரப்பெரும அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.
தமது இறப்பின் பின்னர் மக்கள் கூடுவார்களோ இல்லையோ தமக்கு தெரியாது எனவும், மயானம் வரையில் பெட்டியை சுமந்து செல்வதற்கு ஏற்கனவே சிலருக்கு கூலி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது மத வழிபாடுகளின் அடிப்படையில் இறுதிக் கிரியைகளில் செய்யப்படும் பிரதான நடவடிக்கையையும் விரைவில் இறப்பதற்கு முன்னதாகவே செய்து முடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மிகவும் உருக்கமான இந்த சமூக ஊடகக் காணொளி தற்பொழுது வைரலாகி உள்ளது.