இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 க்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் முருகன் தமக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
லண்டனில் உள்ள தமது மகளுடன் வசிப்பதற்காக தாம் விசா பெற போவதாகவும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாயின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாகும் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமக்கு உரிய அடையாள அட்டையை வழங்குமாறு மறுவாழ்வு பணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் முருகன் கோரியுள்ளார்.
இதன்படி, குறித்த மனு மீதான விசாரணை இன்று, நீதிபதிகளான ஆர்.சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தமிழக அரசு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார்.
குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்காக மத்திய அரசாங்கத்திற்கு நேற்று கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் சட்டத்தரணி மன்றுரைத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள், இலங்கை உயர்ஸ்தானிகரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை என அறிவித்து முருகனின் மனுவை நிறைவு செய்து உத்தரவிட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.