மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி மாதம் ஆகும் .மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. இதன் காரணமாக தான் மாதங்களில் மகத்தான மாதம் என்று மாசி அழைக்கப்படுகின்றது.
மாசி மகம் நாளில் ஆறு, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது.
மாசி மகம் அன்று புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் கூட அடியோடு நீங்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம்.
இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம்.
இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர். மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டி காரடையான் நோன்பு என்று இதைக் கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு மாசி மகம் விழா வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெளர்ணமி திதி பிப்ரவரி 23ம் தேதி மாலை 4.55 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 10 மணி வரை உள்ளது.
மகம் நட்சத்திரம் பிப்ரவரி 23ம் திகதி இரவு 8.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ஆம் திகதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் பிப்ரவரி 24ஆம் திகதி காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்.
மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம்.
சிம்ம ராசியில் குரு பயணம் செய்யும் போது மாசி மகம் நாளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது.
ஜோதிடரீதியாகப் பார்த்தால், கும்ப ராசியில் சூரியன் இருக்க, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளில் பௌர்ணமி வரும்.
இந்த பௌர்ணமி திருநாளை மாசி மகம் என்று சொல்கிறோம். அதேபோல், கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சிம்மத்தில் சந்திரனும் குருபகவானும் இணைந்து இருந்தால் அது மகாமகம் என்று சொல்லப்படுகிறது.
விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவ சிந்தனையுடன் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்துவந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
புராண கதை
வருண பகவான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடித்தபோது கடலில் மூழ்கியே இருந்தாராம். அந்த தோஷம் விலக சிவ பெருமானை மனமுருகி வணங்கினார். அவரின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும்.
இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
மாசி மகத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம். அம்பிகை வலம்புரி சங்காக கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான். மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பவுர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான்.
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். இந்த நாளில் பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். சொந்த வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் வராகப் பெருமாளை வழிபாடு செய்யலாம்.
அதற்கு ஒரு கலச செம்பில் சுத்தமான நீர், பச்சை கற்பூரம், துளசி, வில்வம், விபூதி, மலர் போட்டு புனித நீராடலாம். குலதெய்வதற்கு விளக்கேற்றி பூஜை செய்யலாம்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.
மாசி மகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் 7 ஜென்ம பாவம் தீரும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.