கொரோனாவுக்கு கணவனை பறிகொடுத்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்து மகன், மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் ஈரோட்டத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (37), சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40) என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பாஸ்கர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ் கிருஷ்ணன் (6) என்ற மகனும் இருந்தனர்.இந்தநிலையில், கடந்த மாதம் 2-ஆம் திகதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ஆம் தேதி பரிதாபமாக இறந்தார்.
கணவர் இறந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த நித்யா தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு திண்டலில் உள்ள தனது தந்தை பார்த்தசாரதி (67) வீட்டிற்கு வந்தார்.
நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவரின் பிரிவை தாங்க முடியாத நித்யா மனவேதனையுடன் காணப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்துவிட்டால் தன்னுடைய குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? என்று நினைத்த நித்யா அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மதிய உணவிற்கு பிறகு, நித்யா தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து நித்யா தனது 2 குழந்தைகளுக்கும் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்துள்ளார். இதனால் சிறிது நேரத்திலேயே குழந்தைகள் 2 பேரும் மயங்கி விழுந்தனர். பின்னர் மீதமிருந்த மாத்திரைகளை நித்யா விழுங்கினார். இதனால் அவரும் மயக்கம் அடைந்தார்.
நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் பார்த்தசாரதி கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மகள், பேரன், பேத்தி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா பொலிஸார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.