கனேடியர்களுக்கான விசா சேவைகளை இந்தியா இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இது தொடர்பாக சமீபத்திய கனேடிய நடவடிக்கைகள் சிலவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த பிறகு, விசா சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதன்படி நுழைவு, வணிகம், மருத்துவம் மற்றும் மாநாட்டு விசாக்களுக்கான சேவைகள் வியாழக்கிழமை முதல் அனுமதிக்கப்படும்.
“அவசர சேவைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள தூதரகங்களால் தொடர்ந்து கையாளப்படும்” என்றும் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
அதனை தொடர்ந்து கனேடியர்களுக்கான விசாவை இந்தியா நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் விசா வழஙகவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை ஐயப்ப சுவாமியை தரிசிக்க கனடாவில் இருந்து பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் வருடம்தோறும் இந்தியா சென்று வந்த நிலையில், கனடா -இந்தியா மோதல் போக்கால் விசா நிறுத்தப்பட்டிருந்தமை கனடா வாழ் ஐயப்ப பக்தர்களை கவலைக்குள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் கனேடியர்களுக்கான விசாவை இந்தியா வழங்கவுள்ளமை இந்தியா செல்ல காத்திருந்த கனடா வாழ் ஐயப்ப பகதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.