மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ஐஸ்மோல் பின் வீதியிலுள்ள கிணற்றிலிருந்து 04 வயது சிறுவன் நேற்று (10) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதால், தந்தை நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
தாய், தந்தையுடன் இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சிறுவன் காணமால் போயுள்ளதாகவும், பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுவனை தேடிப் பார்த்த போது வீட்டின் முன்னால் அமைந்துள்ள கிணற்றினுள் சிறுவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.நான்கு பிள்ளைகளைக் கொண்ட எம்.எம்.எம்.நளீம், எம்.ரீ.சித்தி சமீறா தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையான நளீம் ஹாபில் எனும் சிறுவனே இவ்வாறு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் சம்பவங்களை கண்டறிந்து கொண்டதுடன் சாட்சியங்களையும் கேட்டறிந்து கொண்டார்.நீதிபதியின் உத்தரவுக்கமைய சிறுவனின் சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்தியர் ஜலபெரம சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
சிறுவனின் பெற்றோர் இருவரும் இரண்டாவது திருமணமாக மணவாழ்க்கையில் இணைந்தவர்கள். சிறுவனின் தந்தையான எம்.எம்.எம்.நளீம், ஏற்கனவே திருமணமாகி 4 பிள்ளைகள் உள்ளனர். அதில் மூத்த மகள் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் எம்.எம்.எம்.நளீம் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
உயிரிழந்த சிறுவனை, தந்தை எம்.எம்.எம்.நளீம் தொடர்ந்து தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் சிறுவன் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.