இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது.நேற்று மாத்திரம் 24 ஆயிரத்து 374 பேருக்கு தடுப்பூசி வழங்கியதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான ஒருவார காலத்துக்குள் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 327 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.அதேபோன்று பெப்ரவரி 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான ஒருவாரத்துக்குள் 31 ஆயிரத்து 760 பேருக்கும் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒருவாரத்துக்குள் 55 ஆயிரத்து 385 பேருக்கும் 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 997 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 26ஆம் திகதி 13 ஆயிரத்து 164 பேருக்கும் நேற்று முன்தினம் சனிக்கிழமை 35 ஆயிரத்து 343 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதன்படி நாட்டில் மொத்தமாக இதுவரையில், 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக ஜனவரி 28ஆம் திகதி கிடைக்கப்பெற்ற கொவிஷீல்ட் 5 இலட்சம் தடுப்பூசிகளில் 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது.அத்தோடு, அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் மேலும் 5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசி கடந்த 25ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.