யாழ்.கல்வியங்காடு பகுதியில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்ட சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் உயிரிழந்த சிறுமி குறைந்த சம்பளத்தில் முழு நேர வீட்டுப் பணிப் பெண்ணாக விற்பனை செய்யப்பட்டாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்.நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்வியகாடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமி தவறான முடிவால் உயிரிழந்தார். சிறுமி உயிர் இழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் பல முக்கிய அதிர்ச்சி தரும் விடயங்கள் கசிந்துள்ளது.
சிறுமிக்கு தாயார் இல்லாத நிலையில் தந்தையார் 2வது திருமணம் செய்த நிலையில் சிறுமியை தம்முடன் சேர்த்துக் கொள்ளாமல் வீட்டுப் பணிப் பெண்ணாக அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் சிறுமியை யார் வேலைக்கு அமர்த்தினார்கள்? சிறுமியின் தொடர்பை ஏற்படுத்தியவர் யார்? என்பது தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை. அதேசமயம் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்களிடம் எவ்விதமான சட்ட நீதியான ஆவணங்களும் இல்லாமல் வீட்டிலேயே தங்கிய நின்று முழுநேர பணிப்பெண்ணாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாயற்ற சிறுமி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெகுவாக உள்ளமை பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவருகிறது. அதோடு சிறுமிக்கு தொலைபேசி பாவனை தடை செய்யப்பட்ட நிலையில் மாதாந்த ஊதியமும் நேரடியாக தாய் வழி உறவினர் ஒருவருக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய 16 வயதுக்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டவர்களை முழு நேரமாக வீட்டு வேலைக்கு அமர்த்த முடியாது. அப்படியான நிலையில் வேலை முடிந்ததும் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் காணப்படுகிறது.
எனினும் உயிரிழந்த சிறுமியின் விவகாரத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக அதே வீட்டில் தொடர்ச்சியாக தங்க வைக்கப்பட்டதன் காரணமாக மனவிரத்தியினால் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே வீட்டு பணிப் பெண்ணாக உரிய சட்ட ஏற்பாடுகள் இன்றி வேலைக்கு. அமர்த்தப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் தேசிய சிறுவர் அதிகாரசபை தொழில் திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன தலையீடு செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்தப்படுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது