யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்காக அறவிடப்படும் விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் (18-07-2023) அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நடைபெற்றது.
மேலும் இந்த சந்திப்பு, அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, யாழ் சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இவ்விமான நிலையத்தில் சர்வதேச விமான நிறுவனங்களினால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில் 50% வீதத்தை மாத்திரம் 06 மாதங்களுக்கு அறவிடுவதற்காக 2022.12.19 அன்று இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சலுகைக் காலம் 2023.07.11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
யாழ் சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்ற பயணிகளின் விமானப் பயணச்சீட்டுக்களின் விலையைத் எளிதில் செலுத்தக்கூடியதான விலையைத் தீர்மானிப்பதற்காக விமானமேறல் அறவீட்டு வரியில் 50% வீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கான அனுமதியை வழங்குகின்ற காலப்பகுதியை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.