யாழில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஒருவரும், அராலி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் கடந்த 29.06.2023 அன்று அராலி, கல்லூண்டாய் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த யாழ். போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியரின் இறுதிச் சடங்குகள் கடந்த 30.06.2023 அன்று இடம்பெற்றன.
இந்த நிலையில் அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சறோஜன் (சுதா – வயது 29) இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகள் வேலங்காடு இந்து மயானத்தில் நடைபெற்றது.
அவரது இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சமூகமட்ட பொது அமைப்பினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீரின் மத்தியில் அவரை வழியனுப்பி வைத்தனர்.
அவர் அராலி மத்தி ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.