நண்பர்கள் வட்டம் அதிகம் உள்ள சூழலில் வளர்ந்தவர்களுக்கு நான் சொல்லப்போவது பெரிய மேட்டரே இல்லை. சிறு வயதில் இருந்தே தனிமையான சூழலில் வளர்ந்தவர்களுக்கு மற்றவர்களை விட கூச்ச உணர்வு ரொம்ப அதிகமாகவே இருக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கு இடுப்பை தொட்டால், கூச்ச உணர்வு சீக்கிரம் வந்துவிடும். அதிலும் ஒரு சிலருக்கு சொரணையே இருக்காது. என்ன பண்ணாலும், எருமை மாடு மேலே மழை பெய்த மாதிரி நிற்பாங்க.
என்னையெல்லாம் தொட்டால், உடனே துள்ளிக்குதித்து விடுவேன். இதில் அதிசயமாக சிலர், இடுப்பை தொட்டால், அடிக்கக் கூட செய்வாங்க. எதற்கும் உஷாரா இருங்க. எனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல, யாராவது தோள் மீது கை போட்டாலோ, இல்லை சும்மா சம்பிரதாயத்திற்கு கட்டிப்பிடித்தாலோ கூச்ச உணர்வு உச்சத்திற்கு சென்று விடுகிறது. சில நேரங்களில் ஓங்கி அடித்துவிட வேண்டும் எனக்கூட தோன்றும். மெல்ல மெல்ல என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு உளவியல் ரீதியாக காரணம் என்னவென்று பார்த்தால், நான் சிறு வயதில் இருந்து ஹாஸ்டலில் வளர்ந்தேன். வீட்டை விட்டு பிரிந்த ஏக்கத்தில் நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக்கொள்ள வில்லை. அப்படியே வளர்ந்து பழகிவிட்டதால், பெற்றோர்கள், நண்பர்களின் தொடும் உணர்ச்சி இன்றிப் போனது. விளையாட்டிலும் பெரிதாக ஆர்வம் இல்லை என்பதால், பிறர் என்னை தொடுவதே அதிசயம். இதுவே ஓடி, ஆடி திரிந்து கபடி மாதிரி, உடல் தொடுதல் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால், இந்த கூச்ச உணர்வே வந்திருக்காது.
பொதுவாக ஆண்கள் பெண்களை தொட்டால் தான் பெண்களுக்கு ரொம்ப கூச்ச உணர்வு வருமென கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயதிலிருந்து தான் இந்த வெறுப்பு உண்டானது. யாரையும் நான் சாதாரணமாக தொடக்கூட அனுமதிப்பதில்லை. நட்பு வட்டமோ, அல்லது வெளியில் அடிக்கடி போகும் பழக்கமோ அவ்வளவாக இல்லை. பிறகு தனிமையை விடுத்து, நண்பர்கள் நட்பு பழக்கத்தை அதிகரித்துக்கொண்டேன் காலப்போக்கில் மெல்ல மெல்ல கூச்ச உணர்வு குறைந்து வருகிறது.