தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட ஆர்வலர், விமர்சகர் என பன்முக திறமை கொண்ட நடிகர் வெங்கட் சுபா கொரனோ தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளராக திரை உலகில் அறிமுகமாகி, ‘சின்ன மாப்ளே: என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெங்கட் சுபா. தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், வங்காள மொழிகளிலும் திரைத்துறையில் படத் தயாரிப்பு பணிகளில் நிர்வாக அதிகாரியாக இவர் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
அத்துடன் ‘ராசய்யா’, ‘மாணிக்கம்’, ‘அரவிந்தன்’, ‘தயா’, ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’, ‘மொழி’, ‘வாய்மை ‘உள்ளிட்ட பல படங்களில் நடிகராக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான குறும்படங்களிலும் நடித்திருக்கும் இவர், அண்மையில் டூரிங் டாக்கீஸ் என்ற இணையதளத்தைத் தொடங்கி, சினிமா தொடர்பான விடயங்களை பார்வையாளர்களுக்கு வழங்கி வந்தார்.
மேலும், தயாரிப்புத்துறையில் அனுபவம் மிக்க இவர் பல இளம் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார். இவருக்கு அண்மையில் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், திரையுலகப் பிரபலங்கள் பலரும் வெங்கட் சுபாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.