உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் ஒருவரின் புதல்வரான சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்கு, விஷம் வைத்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியொருவர் இன்று (25) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 ஆம் திகதி கிரிவத்துடுவ, தலகலவத்த பிரதேசத்தில் உள்ள மனுதாரரான சட்டத்தரணியின் வீட்டைச் சுற்றி பல இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறிய அளவிலான சில பொதிகள் கிடந்துள்ளன.
அதனைப் பார்த்த பணிப்பெண் சட்டத்தரணிக்கு அறிவித்து, தேடிப்பார்த்தபோது திடீரென வீட்டில் இருந்து நாய் ஓடிவந்து தரையில் மயங்கி விழுந்துள்ளது. இதனையடுத்து. கால்நடை மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்து நாயை பரிசோதித்தபோது, குறித்த நாய் ஒருவகை விஷத்தை உட்கொண்டதால் இறந்ததுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் கடந்த 12 ஆம் திகதி பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டின் முன்புறம் உள்ள பிரதான வாயில் அருகே சிவப்பு நிற காரில் வந்திறங்கிய ஒருவர் தோட்டத்துக்குள் சில பொருட்களை வீசுவது தெரியவந்தது.
இதனடிப்படையில், கஹதுடு பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சிசிடிவி சாட்சியங்களைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்ததில் குறித்த கார் உயர்நீதிமன்றத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சந்தேகநபரான சட்டத்தரணியை இன்று பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிரகாரம் வருகைதந்தது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் முறைப்பாட்டாளரான சட்டத்தரணியைக் கொல்லும் நோக்கில் நான்கு பேர் அவரது வீட்டிற்கு வந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.