யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 460 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேரும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவரும், மன்னாரில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தக் கிராமத்தில் தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்புடைய ஐவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்