துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான துருக்கி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்கெண்டருன் துறைமுகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கண்டெய்னர்கள் எரிந்து சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த கண்டெய்னர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி ஜனாதிபதி ஷதய்யிப் எர்துகான் மீட்பு பணி மற்றும் நிவாரணக் குழுக்கள் வருவதற்கு தாமதமானதுதான் அதிக உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறியுள்ளார். துருக்கியில் ஏற்ப்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மீட்பு பணிகள் தாமதமாவதாகவும் சொல்லப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் துருக்கி சென்றடைந்தன. இந்த விமானங்களில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவசரகால மருந்து பொருட்கள் ஆகியன துருக்கி மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளன.