தமிழகத்தில் திருமணமான இளம்பெண் என் மரணத்துக்கு 2 இளைஞர்கள் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (33). இவருக்கும் ரேஷ்மா(25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளன. இந்தநிலையில் ரேஷ்மா வீட்டுக்கு, அதே ஊரை சேர்ந்த உறவினரான தென்னரசு (30) வந்து சென்றுள்ளார்.இந்தநிலையில் ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்தபோது அவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (20), முத்துக்குமார்(30) ஆகியோர் ரேஷ்மாவின் கணவர் விமல்ராஜிடம் கூறியுள்ளனர்.
இதனால் விமல்ராஜ், ரேஷ்மாவை கண்டித்துள்ளார். இதைதொடர்ந்து ரேஷ்மா, தன்னை பற்றி கணவரிடம் அவதூறாக ஏன் கூறினீர்கள்? என முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோரிடம் செல்போனில் பேசி திட்டியுள்ளார்.அதற்கு அவர்கள் மோசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த ரேஷ்மா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரேஷ்மாவின் சடலத்தை மீட்டனர். அந்த வீட்டில் பொலிசார் சோதனையிட்ட போது, ரேஷ்மா எழுதிய கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், எனது சாவுக்கு பாலமுருகன், முத்துக்குமார் ஆகியோர் தான் காரணம் என எழுதப்பட்டு இருந்ததது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.