23 வயதான பெண் ஒருவருக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்ததாக அவர் கூறும் ஆசை தான், கேட்போரை சற்று தலை கிறங்க வைத்துள்ளது.
ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (வயது 23). இவரது கணவர் பெயர் காலிப் ஒஸ்டர்க். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இந்த கோடீஸ்வர தம்பதியருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளன. இதில், ஒரு குழந்தையை மட்டுமே கிறிஸ்டினா இயற்கையாக பெற்றெடுத்த நிலையில், மற்ற குழந்தைகள் அனைத்தையும் வாடகை தாய் மூலம் பெற்றுள்ளார்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது ஜார்ஜியா நாட்டில் சட்டப்பூர்வமானது ஆகும். இந்நிலையில், மொத்தம் 105 குழந்தைகளை பெற வேண்டும் என கிறிஸ்டினா விருப்பம் தெரிவித்துள்ளார். ‘எனக்கும், எனது கணவருக்கும் குழந்தைகள் மீது அதிக விருப்பமுண்டு. ஆறு வருடங்களுக்கு முன்பு, எனது முதல் குழந்தை ஒலிவியாவை நான் பெற்றெடுத்தேன். மீதமுள்ள குழந்தைகள் அனைத்தும், என்னிடத்து இருந்தும், எனது கணவரிடத்தும் இருந்து மரபணு ரீதியாக வாடகைத் தாய் மூலம் பெற்றோம்.
இறுதியில் எனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், இத்துடன் நிறுத்துவதற்கு மட்டும் தற்போதைக்கு திட்டமில்லை’ என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். தனது மனைவி குறித்து காலிப் பேசும் போது, ‘நான் விருப்பப்பட்டது போலவே எனக்குக் கிடைத்த மனைவி அவர். தூய்மையான இதயமும், கனிவான குணமும் கொண்ட வைரம் அவள்’ என காலிப் கூறியுள்ளார்.