சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என கூறிக்கொண்டு, வீடுகளில் சோதனை என்ற பெயரில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக, வவுனியா பொலிசார் பொது மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
தங்களை அரச புலனாய்வாளர்கள் அல்லது பொலிசார் என கூறிக்கொண்டு வீடுகளுக்கு விசாரணை என்ற பெயரில் வரும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் சீருடை இல்லாமல் விசாரணை என்ற பெயரில் வருபவர்களை, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு விசாரணை என்ற பெயரில் சிவில் உடையில் வரும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்குமாறு கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களையும் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பாக உடனடியாக, 024-2222222, 024-2222226, 071-8591343, 072-9977302, 071-4716286 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.