கிழக்கை மீட்கப்போகின்றோம் இந்தப் பிரதேசத்திலே இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயற்படுவோம் என்று கூறி வாக்குகளைப் பெற்றவர்கள் பிள்ளையானுடைய கட்சியை சேர்ந்தவர்களே என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால் இஸ்லாமிய மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றாக வாழவேண்டும் என்றே தாம் விரும்புவதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான தேர்தல் பிரசாரக்கூட்டம் பெரியகல்லாறில் உள்ள பிரிதி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். விவசாயிகளுக்கு உரம் இல்லாமல் போனபோது பிள்ளையானை தெரிவு செய்தது தவறு என்ற மனநிக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய செயலாளர் பிரசாந்தன் ஊடக சந்திப்பொன்றிலே எங்களுடைய வேட்பாளர்களின் பெயர்களை கொடுக்கின்றபோது நாங்கள் மோசடி செய்ததாக சில ஆதாரங்களை காட்டி கூறியிருக்கின்றார்.
பிரசாந்தன் அவரது கட்சியின் தலைவர் பிள்ளையானுடைய செயலாளராக இருந்த அசாத் மௌலானாவைப் பற்றி ஏன் இதுவரை ஊடக சந்திப்பை நடத்தவில்லை? இஸ்லாமிய மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவன்தான் நான்.
ஆனால் கிழக்கை மீட்கப்போகின்றோம்இ இந்தப் பிரதேசத்திலே இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயற்படுவோம் என்று கூறி வாக்குகளைப் பெற்று வந்த பிள்ளையானுடைய செயலாளராக இருந்தவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அசாத்மௌலானா ஆவார். ஒருசில வாரங்களுக்கு முன்பு இந்த அசாத்மௌலானா என்பவர் சுவிற்சர்லாந்து நாட்டிலே பல வாக்குமூலங்களை கொடுத்திருக்கின்றார்.
சிவநேசதுரை சந்திரகாந்தனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணத்திலேஇ மட்டக்களப்பு மாவட்டத்திலே மேற்கொண்ட வன்முறைகளைப்பற்றி பல வாக்குமூலங்களை கொடுத்திருக்கின்றார்.
அவர்கள் கொலைமுயற்சிகளில் ஈடுபட்டதாகவும் படுகொலைகளை செய்வதற்கு காரணங்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்களையும் சுவிற்சர்லாந்து நாட்டிலே வழங்கியிருக்கின்றார்.தேசிய ரீதியிலே எங்களுடைய கட்சியை விமர்சிக்கும் நபர்கள் இந்தக் கொலைக்குற்றச்சாட்டிற்கு ஏன் இன்னும் பதில் கூறவில்லை.
இவர்களுடைய கரங்கள் இரத்தம் படிந்தவை என்பதை இந்தப் பிரதேசத்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சிவநேசதுரை சந்திரகாந்தனைப்பற்றி கூறியதாக சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.