திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் தங்களுக்கு என ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி அனாதையான நிலையில் இருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களினதும் சிங்களவர்களினதும் நலனை கவனிக்க அந்த மாவட்டத்தில் இருந்து முஸ்லீம் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை செய்கிறார்கள்.
மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டு தமது பிரதேசங்களினும் தமது மக்களினதும் நலனை கவனிக்கிறார்கள். ஆனால் தமிழர்களின் நிலை? திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி கலந்து கொள்வதில்லை.
திருகோணமலை மாவட்டத்திற்கு தமிழர் பிரதிநிதியாக சம்பந்தன் இருக்கிறாரே என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அவருக்கு வயது 88. நாடாளுமன்றத்திலேயே ஆகக்கூடிய வயதுடையவர் என்ற பெருமை வேறு. சாகும் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தே சாக வேண்டும் என்பது அவரது ஆசை. இதனால் இன்று திருகோணமலை தமிழ் மக்கள் தமது நலனை கவனிக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி அனாதையாக நிற்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறுகிறபோது சம்பந்தன் அவர்கள் உயிருடன் இருந்தால் அவர் தான் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார். திருகோணமலை தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தது தமக்கு ஒரு பிரதிநிதி வேண்டும். தமது நலனை கவனிக்க வேண்டும் என்பதற்காவே. சம்பந்தன் கொழும்பில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல.
திருகோணமலையில் தமிழரசுக்கட்சியிலிருந்து வேறு யாரும் நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியாத படி நிபந்தனை விதித்தே வேட்பாளர் பட்டியிலில் ஏனையவர்களை சேர்த்துக்கொள்வார் சம்பந்தன். தலைமை வேட்பாளரான எனக்கு ஒரு வாக்கு, உங்களுக்கு ஒரு வாக்கு என்றுதான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஒவ்வொரு முறையும் தான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வியூகத்தை வகுத்துக்கொள்வார் சம்பந்தன்.
அதன் படிதான் 88 வயதில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி, கொழும்பில் அரசாங்கம் கொடுத்த சொகுசு மாளிகையில் வாழ்ந்து கொண்டு நாடாளுமன்றத்திலும் செயல்திறன் அற்ற கடைசி 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வந்திருக்கிறார். தான் தெரிவான மாவட்டத்திற்கும் செல்வதில்லை. நாடாளுமன்றத்திற்கும் செல்வதில்லை.
இவரை தெரிவு செய்த மக்கள் தமக்கான ஒரு பிரதிநிதி இல்லாமல் அனாதையாக நிற்கிறார்கள். தன்னால் தன்னுடைய மாவட்டத்திற்கு அடிக்கடி சென்று அம்மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என்றால் ஏன் அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். பதவியை இராஜினாமா செய்து அம்மாவட்ட மக்களுக்கு சேவை செய்யக் கூடிய ஒருவரிடம் அப்பதவியை கொடுக்க வேண்டியதுதானே.
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களின் அவலநிலையை போக்க தமிழரசுக்கட்சி விரைவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். அண்மையில் திருகோணமலைக்கு வந்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிடமும் கட்சியின் பதில் செயலாளர் சிவமோகனிடமும் அம்மக்கள் விபரமாக எடுத்து கூறி திருகோணமலை தமிழர்களுக்கு செயற்பட கூடிய ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். தமிழரசுக்கட்சி கூடி முடிவெடுக்கும் என கூறிச்சென்றார் மாவை சேனாதிராசா.
80வயது மாவை சேனாதிராசாவுக்கு திருகோணமலை தமிழ் மக்கள் சொன்னவை ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை. விரைவாக முடிவெடுத்து அம்மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற அக்கறை மாவைக்கும் இல்லை. சம்பந்தனை பொறுத்தவரை தான் சாகும் வரை அரச பங்களா நாடாளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். சம்பந்தன் என்ற ஒரு தனிமனிதனின் பதவி ஆசை சுகபோகங்கள், என்பவற்றிற்காக திருகோணமலை மாவட்ட தமிழர்களை பலிக்கடாவாக்க வேண்டுமா?
இரா.துரைரத்தினம்.