தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.
தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்துக்கு இன்று (22.01.2023) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். அத்துடன், அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், சேத விபரங்களையும் கேட்டறிந்தார்.
அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.
மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. 05 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. சுமார் 49 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் மற்றும் பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.