நாட்டு மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான் சிறைச்சாலைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குல் வழக்குத் தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகையான 10 கோடி ரூபாவினை செலுத்த எவ்வித பொருளாதார இயலுமையும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் இருந்து பணத்தை திரட்டி நட்டஈட்டை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் பணம் வழங்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வழக்குத் தீர்ப்பில் 10 கோடி ரூபா செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, எனக்கு 10 கோடி ரூபா செலுத்தும் இயலுமை கிடையாது.
மக்களிடம் இந்த நிதியை திரட்ட உத்தேசித்துள்ளேன். என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்று கூட கிடையாது. நாடு முழுவதிலும் பணம் திரட்ட வேண்டும், இல்லையென்றால் சிறைக்கு செல்ல நேரிடும்.
சகோதரர் என்ற போதிலும் டட்லி சிறிசேனவின் வர்த்தக நடவடிக்கைகளில் எனக்குத் தொடர்பு கிடையாது. எமது குடும்பத்தில் 11 பேர் இருக்கின்றோம், அப்பாவிற்கு ஐந்து ஏக்கர் நெல் வயல் காணியும் மூன்று ஏக்கர் காணியும் காணப்பட்டது.
ஐந்து ஏக்கர் நெல் வயல் காணியை ஐந்து தங்கைமாரும் பிரித்துக் கொண்டனர். நான் 3 ஏக்கர் காணியில் மா பயிரிட்டுள்ளேன், வேறு எனக்கு வருமான வழி கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.