முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் காலமானார்.
கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார்.
இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பிறகு போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார்.
16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்தார். அவருக்குப் பின் போப் பதவிக்கு வந்த போப் பிரான்சிஸ் அவரை அடிக்கடி சென்று சந்தித்து வந்ததாக கூறியுள்ளார்.
“வாட்டிகனில் உள்ளமாத்தர் எக்லெசியா மடாலயத்தில் இன்று காலை 9.34 மணிக்கு 16-வது பெனடிக்ட் காலமானார். கூடுதல் விவரங்கள் கூடிய விரைவில் தரப்படும்,” என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் 16-வது பெனடிக்ட் உடல் வைக்கப்படும், இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் என்றும் வாடிகன் கூறியுள்ளது.
´20-ம் நூற்றாண்டின் சிறந்த இறையியலாளர்களில் ஒருவர்´ என்று 16-வது பெனிடிக்டிற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் கார்டினல் வின்செட் நிகோல்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
“2010-ம் ஆண்டு 16-வது பெனடிக்ட், போப் பதவி வகித்த போது எங்கள் இடத்திற்கு வருகை தந்தது நினைவுக்கு வருகிறது. அப்போது, மரியாதை தரும் பண்பு, மென்மை, எதிரில் இருப்பவரின் மனதை அறிதல், சந்தித்த அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்பது போன்ற அவரது பண்புகளை பார்க்க முடிந்தது” என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போப் ஆண்டவர் கடந்த சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், முதுமை காரணமாக அவரது உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் பிறந்தவரான 16-வது பெனடிக்டின் இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர். 78 வயதில் 2005-ம் ஆண்டு போப்பாக பதவியேற்ற அவர், மிக அதிக வயதில் போப்பாக தேர்வானவர்களில் ஒருவரானார்.
அவரது போப் ஆண்டவர் பதவிக் காலத்தின் பெரும்பகுதியில், பல தசாப்தங்களாக பாதிரியார்களால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது பற்றிய குற்றச்சாட்டுகள், வழக்குகள், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை கத்தோலிக்க திருச்சபை எதிர்கொண்டது. 1977 மற்றும் 1982-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மியூனிக் பேராயராக தாம் பதவி வகித்த போது அத்துமீறல் குறித்த வழக்குகளைக் கையாள்வதில் தவறுகள் நடந்ததாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.