பொதுவாக குளிர்காலத்தில் சூடான பானங்களை குடிப்பது உடலுக்கு நன்மையளிக்கும். அதையே ஆரோக்கிய நன்மைகளுடன் அருந்த நினைத்தால் மசாலா டீ தான் நல்ல தேர்வு.
மசாலா டீ
மசாலா டீ நம் உடலுக்குள்ளிருந்து வெப்பத்தை அளிக்கும், குளிர் காலநிலையை எதிர்த்துப் போராட உதவும்.
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், குங்குமப்பூ மற்றும் இஞ்சி ஆகிய மசாலாப் பொருட்களுடன் கமகமவென வாசனையுடன் தயார் செய்யப்படுவதுதான் மசாலா டீ.
இதில் உள்ள மசாலாக்கள் உடலை வெப்பமாகவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் உதவுகிறது.
இஞ்சி டீ, இலவங்கப்பட்டை டீ உள்பட மசாலா டீயில் பலவகை உண்டு.
மசாலா டீயின் பலன்கள்
உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலனளிக்கும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். காஃபின் போன்ற பானங்களை காட்டிலும் மசாலா டீ ரொம்பவும் நல்லது.
செரிமானத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக பேண உதவும். நோய் எதிர்ப்பு சக்தி மசாலா டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக போராடுகிறது.
வலியைக் குறைக்க
சூடான மசாலா டீ வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
குறிப்பாக குங்குமப்பூ கலந்த டீ குடிப்பது அல்லது கொதிக்கும் நீரில் ஒரு சில கிராம்புகளை போட்டு தேநீராக அருந்துவது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. இதன் மூலம் வலியை நீக்குகிறது.
எடை குறைப்பு
மசாலா டீயில் உள்ள கலோரிகள் குறைவு. அதே சமயம் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஊட்டச்சத்து அதிகம். ஆகவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மசாலா டீயை தாராளமாக அருந்தலாம்.
மசாலா டீயில் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்துவது சிறந்த டானிக்காக செயல்பட்டு பசியை கட்டுப்படுத்துகிறது.
ரத்த ஓட்டம் சீராகும்
குளிர் காலங்களில் நமது உடல் செயல்பாடு குறைவினால் உடல் விறைப்பு தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பலவீனமடைகிறது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
அதே நேரத்தில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
செரிமானம் மேம்படும்
குளிர்காலத்தில் செரிமான பிரச்னைகள் தலை தூக்கும். இஞ்சி, புதினா அல்லது நட்சத்திர சோம்பு ஆகியவை சேர்த்து ஊறவைத்த தேநீர் செரிமானத்திற்கு உதவுகிறது.
இதை அருந்துவதால் இரைப்பைக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம். இதனை உணவுக்குப் பிறகு அல்லது இடையில் எடுத்து கொள்ள வேண்டும்.
சக்தியை கொடுக்கும்
நாம் அருந்தும் பெரும்பாலான ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் அதிக அளவு காஃபின் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது.
ஆனால் மசாலா டீ இயற்கையான ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. அதோடு இதில் எதிர்மறையான பக்க விளைவுகள் கிடையாது.
இதில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் என்பனவும் அதிகம் உள்ளதனால் மசாலா டீயை தயங்காமல் அருந்தலாம்.