வெளிநாட்டில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் அறிமுகமானது.
தொடர்ந்து கடந்த கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானதுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் ஒப்பந்தமானார்.
தெலுங்கில் நாகர்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைப் போல, தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.
விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி , தற்போது 5 சீசன்களைக் கடந்து, 6-வது சீசனில் உள்ளது.
குறைந்துவரும் ரேட்டிங்
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் நாளுக்கு நாள் குறைவதையடுத்து, அதிலிருந்து நாகர்ஜுனா விலக முடிவெடுத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.
அதேபோல் தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் குறைந்து வருவதால் இந்த சீசனோடு பிக் பாஸ் நிகழ்ச்சியினுடனான உறவை முறித்துக் கொள்ள கமல் ஹாசன் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் போதே, அதிலிருந்து தான் விலக வேண்டும் என்பது அவரது எண்ணமாம். அது தவிர, அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவிருப்பதால், அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் கமலுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விக்ரம் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, KH234 என படங்களிலும் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் பிக்பாஸில் இருந்து விலக அவர் முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது.