கனடாவின் ஒன்ராறியோவில் மூன்றாவது நபருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியுடன் தொடர்புடைய இரத்தக்கட்டிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குறித்த தகவலை, ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் திங்களன்று உறுதி செய்துள்ளார்.
70 வயதைக் கடந்த அந்த நபர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவருக்கு இரத்தக்கட்டிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளார். கடந்த வாரமே இருவருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியுடன் தொடர்புடைய இரத்தக்கட்டிகள் அடையாளம் காணப்பட்டது.
ஒன்ராறியோ முழுவதும் இதுவரை 650,000 ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஒரு தீவிரமான எதிர்விளைவுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என டாக்டர் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமை வரையில் வெளியான தகவலின் அடிப்படையில் ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா, நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக் ஆகிய பகுதிகளில் உள்ள ஐவருக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியுடன் தொடர்புடைய இரத்தக்கட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.