பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (08) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முப்படைகளின் அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கும் பாதுகாப்பு கல்வித் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமான பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவிநிலை என்ற இரண்டு பிரிவுகளிலும் தொழில்முறை அறிவையும் புரிதலையும் வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கற்கை நெறி 16 இல் பங்கேற்ற, இலங்கை இராணுவத்தின் 76 அதிகாரிகள், இலங்கை கடற்படையின் 26 அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் 25 அதிகாரிகள் இதன்போது பட்டங்களைப் பெற்றனர்.
இதனைத் தவிர பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், ஓமான், ருவாண்டா, சவூதி அரேபியா, செனகல் மற்றும் செம்பியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகளும் இங்கு பட்டங்களைப் பெற்றனர்.