மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை (Nandalal Weerasinghe) நீக்கி இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
தற்போதுள்ள பொருளாதாரம் பழைய நிலைமைக்கு மீளவில்லை என்றால், அதனை ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தனியே பொறுப்பேற்க வேண்டும் என்பதாலேயாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற போது அதியுயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரி கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆவார்.
இதனால் நந்தலால் – ரணில் இடையே மனக்கசப்புகள் இருந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
நந்தலால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி நாடாளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.
மேற்படி விடயத்தை உடனடியாக சரி செய்யுமாறு ஜனாதிபதி ஆஷு மாரசிங்கவிடம் தெரிவித்திருந்தமையினால் அவர் உடனடியாக ஊடக சந்திப்பில் தான் பொய்யான கருத்தொன்றினை தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதில் அதிக ஆற்றல் கொண்டவர்களில் 56% பேர் நந்தலால் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று ஒரு குறிப்பிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 44 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலைகளின் அடிப்படையில் நந்தலாலின் தோற்றம் ஜனாதிபதிக்கு சிக்கலாக அமையலாம் எனவே நந்தலாலை தோற்கடிக்க ஜனாதிபதி வியூகமாக செயற்பட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுடன், நந்தலால், கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டமையும் இங்கு எதிர்ப்புக்கு ஒரு காரணியாக உள்ளது என அறிய முடிகிறது.