இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸின் ருத்ரதாண்டவம் உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகத் தலைநகர் டெல்லி, கொரோனாவின் பிடியில் மோசமாக சிக்கி தவிக்கிறது. இந்தியா முழுவதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில் டெல்லியில் அதுவும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அங்கு நிலைமை கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், டெல்லியின் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் மத, சம்பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு தகன மேடைகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.மயானங்களில் கூட்டம் மிகுதியாக உள்ளதாலும், இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், மக்கள் திறந்த மைதானங்களில் வைத்து கொரோனா நோயாளிகளின் உடல்களை எரியூட்டி வருகின்றனர்.
டெல்லியின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும், மயானங்களில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் புகைப்படங்களும் காண்போர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.
இந்த கோரப் பிடியில் இருந்து நாட்டு மக்கள் விடுபட, மத்திய அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.