சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாவது மதிப்பீட்டை எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைலமையில் நேற்று (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
இதற்கமைய அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இந்தச் சட்டமூலங்கள் குறித்த விவாதம் நடத்தப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன், பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்தம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக டிசம்பர் 09ஆம் திகதி முழுநாளும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அன்றையதினம் எடுக்கப்படவிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகளை டிசம்பர் 10ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின் பின்னர் 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு,உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.