கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவுதினம் இன்று !
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில உயிரிழந்தவர்களுக்காக சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள்.
1987 ஒக்டோபர் 24ம் திகதி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.