தமிழகத்தில் காதல் மனைவி பிரிந்ததால், மனம் உடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சகோதரர் மருத்துவமனைக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கு வேல்முருகன் என்ற 25 வயது மகன் உள்ளார்.
வேல்முருகன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேல்முருகன் தனது உறவினரான நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர். என். வரதராஜன் என்பவரின் மகள் ரஞ்சினி (20) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, கரூரில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் தம்பதிகள் ஊருக்கு வந்துள்ளனர்.
அப்போது, ரஞ்சனியை மட்டும், அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர், அதன் பின் அவர் வீடு திரும்பவேயில்லை.
இதனால் மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த வேல்முருகன், தற்கொலை செய்ய முடிவு செய்து, நாச்சியார்புரம் அருகே உள்ள கண்மாயில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது வேல்முருகன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணின் சகோதரர், விஜய் என்பவர் அவரை பார்க்க வந்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்த படி திடீரென்று விஜய் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வேல்முருகனை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் காயமடைந்த வேல்முருகனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பொலிசார் தலைமறைவாக இருக்கும் விஜய்யை தேடி வருகின்றனர்.