கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் பல பெண்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இதுவரை கிடைத்த தகவல்கள் குறித்து கொச்சி நகர பொலிஸ் கமிஷனர் நாகராஜு நிருபர்களிடம் கூறியதாவது: ரோஸ்லிக்கு ரூ.10 லட்சம் தருவதாகவும், பத்மாவுக்கு ரூ.15,000 தருவதாகவும் ஆசை காட்டித் தான் பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்று இருக்கிறார். இருவரையும் 3 பேரும் சேர்ந்து மிக கொடூரமாக கொலை செய்து ரத்தத்தால் பூஜை செய்துள்ளனர். உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாக லைலா கூறினார். அது உண்மைதானா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முகமது ஷாபி ஒரு கொடும் சைக்கோ ஆவார். பணத்திற்காக எதையும் செய்வார். இவர் மீது 75 வயது மூதாட்டியை சித்ரவதை செய்து பலாத்காரம் செய்த வழக்கு உட்பட 8 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
16 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய இவர், லாரி டிரைவர், மெக்கானிக், மீன் வியாபாரம், ஓட்டல் என்று பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் உடல்களில் கத்தியால் குத்தி, ரத்தம் பீய்ச்சியடிப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் மர்ம உறுப்புகளில் கத்தியால் குத்தி ரசிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி கணக்கை தொடங்கி, பலருக்கும் வலை விரித்துள்ளார். பூஜை செய்தால் செல்வம் சேரும் என்று பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். சிலருக்கு ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் காதல் வலையும் விரித்துள்ளார். அதில் தான் பகவல் சிங்கும் சிக்கினார். ஸ்ரீதேவியை கடைசி வரை காதலித்த பகவல் சிங்கிற்கு, போலீஸ் வந்து கூறும் வரை ஸ்ரீதேவி தான் முகம்மது ஷாபி என்று தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஷாபி கொடும் சைக்கோ என்பதால் பத்மா, ரோஸ்லி மட்டுமில்லாமல் மேலும் பல பெண்களை நரபலி கொடுத்திருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். இதை கண்டுபிடிப்பதற்காக பெரும்பாவூர் கூடுதல் எஸ்பியின் மேற்பார்வையில், கொச்சி துணை பொலீஸ் கமிஷனர் சசீந்திரன் தலைமையிலான சிறப்புபடை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கடந்த 5 வருடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் 14 பெண்களும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் போயுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களும் ஷாபியின் நரபலிக்கு இரையாகி இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மந்திரவாத செயலின் ஒரு பாகமான பூஜை என்று கூறி ஏற்கனவே பகவல் சிங்கின் முன்னிலையிலேயே அவரது மனைவி லைலாவை, ஷாபி பலாத்காரம் செய்து உள்ளதாக பொலிசார் கூறினர். தற்போது பகவல் சிங்கையும் கொன்று லைலாவை அடைய ஷாபி திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஷாபியும், லைலாவும் ரகசியமாக திட்டம் தீட்டியிருந்தனர். ஆனால் திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் 3 பேரும் பொலிஸிடம் சிக்கிக் கொண்டனர். இதனால் மயிரிழையில் பகவல் சிங் உயிர் பிழைத்து விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட முகமது ஷாபி பகவல் சிங் மற்றும் லைலாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரி பொலிஸ் தரப்பில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வேறு யாராவது நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்களா? நரபலிக்கு வேறு ஏதும் நோக்கம் உள்ளதா? உள்பட பல்வேறு தகவல்கள் அறிய வேண்டியிருப்பதால் அவர்களை 12 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 3 பேரையும் 12 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. விசாரணைக்கு கொண்டு செல்லும்போது மூன்று பேரின் முகங்களை மறைக்க வேண்டும் என்று பொலிசிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.