தற்போதைய அரசாங்கம் மக்கள் அதிகாரத்திற்கு, மனித சமூகத்திற்கு, மனித ஒன்றுகூடல்களுக்கு, இளைய தலைமுறையின் ஒன்றிணைவுகளுக்கு பயப்படும் கோழைத்தனமான அரசாங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினரை புடை சூழ்ந்து, ஆயுதமேந்தி இளைஞர்களை கேவலமான முறையில் ஒடுக்குவதாகவும், அவர்கள் மனித குலத்தின் பசி வேதனைகள் குறித்துக் கூட அற்பமேனும் பொருட்படுத்துவதில்லை எனவும், வன்முறை மற்றும் அரச மிலேச்சத்தனம் அவர்களுக்கு அன்றிலிருந்தே பரிச்சயமானது எனவும்,இந்த மிலேச்சத்தனத்திற்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வியலுவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் சென்று தொகுதி தொகுதியாக ஒழுங்கமைத்து இலட்சக் கணக்கானோருடன் விரைவில் கொழும்புக்கு வந்து ஜனநாயகத்தை வென்றெடுப்பதாகவும், முடிந்தால், அடக்குமுறையைத் தொடரவும் எனவும், அதற்கு நீண்ட ஆயுள் இல்லை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அரச அடக்குமுறையும்,வன்முறையும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் புனர்வாழ்வு பணியகம் என்ற புதிய நிறுவகத்தை நிறுவுவதன் மூலம் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை கைது செய்து, புனர்வாழ்வளிக்க முயற்சிக்கிறது எனவும், ஆனால் உண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என சகலரையும் அழித்த ராஜபக்ச தலைமுறையினர்கள் தான் எனவும், ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் அனுசரணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், தற்போது மக்களின் இன்னல்களுக்காக குரல்கொடுக்கும் இளைஞர் யுவதிகளை புனர்வாழ்வு என்ற போர்வையில் அவர்களை சித்திரவதை செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர் எனவும், இதனை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.