இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வீட்டு வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு பெண்ணை, இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் எட்டு ஆண்டுகளாக அடிமையாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
நேற்று விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு வழக்கறிஞரான Richard Maidment, இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து ஏமாற்றி அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, நாளொன்றிற்கு வெறும் 3.39 டொலர்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது முதல், அந்த பெண் அடித்து உதைக்கப்பட்டது வரையிலான பல தகவல்களை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
சில ஊடகங்கள் அந்த இலங்கைத் தம்பதியரின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடாத நிலையில், https://www.news.com.au/ என்ற அவுஸ்திரேலிய ஊடகம் மட்டும் அவர்களது பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்த தம்பதியர் இலங்கையைச் சேர்ந்த கணினி பொறியியலாளரான கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவியான குமுதினி என்பது தெரியவந்துள்ளது.தங்கள் மூன்று பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக அந்த தமிழ்ப்பெண்ணை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவந்த கண்ணன் தம்பதியர், இரண்டு முறை அவரை நாடு திரும்ப அனுமதித்துள்ளனர்.
மூன்றாவது முறை 2007ஆம் ஆண்டு அவர் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பவந்தபின், நிலைமையே மாறிவிட்டிருக்கிறது.2015ஆம் ஆண்டு, குளியலறையில் சிறுநீருக்குள் கிடந்த அந்த பெண்ணை மருத்துவ உதவிக்குழுவினர் மீட்டிருக்கிறார்கள். அதன் பிறகுதான் பல விடயங்கள் வெளிவரத்துவங்கியுள்ளன.
தன்னை அடித்து உதைத்ததுடன், தன் கால்களில் கண்ணனின் மனைவி குமுதினி சுடுதண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்தியதாகவும், முகத்தில் சூடான தேநீரை ஊற்றியதாகவும், கைகளில் கத்தியால் கீறியதாகவும் தெரிவித்துள்ள அந்த பெண், காலை 5.30 முதல், மறுநாள் காலை 3 மனி வரை தொடர்ந்து தான் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்கை நீதிமன்றத்தில் விவரித்த திரு. Richard கூறும்போது, அடிமையாக நடத்தப்பட்ட அந்த பெண்ணை குமுதினி அடித்து உதைத்து துன்புறுத்தும்போது, கண்ணன் அதை தடுக்க முயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த இந்தியப் பெண்ணின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன என்று கூறிய திரு. Richard, யாராவது கதவைத் தட்டினால், கதவைத் திறக்கவேண்டுமானால் கூட கண்ணன் தம்பதியரின் அனுமதியின்றி திறக்கமுடியாது என்னும் ஒரு சூழல் அந்த வீட்டில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை கண்ணன் தம்பதியர் மறுத்துள்ள நிலையில் வழக்கு தொடர்கிறது.