திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் நடைபெற்ற வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில், எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் செவ்வாய் கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் வீட்டில் வருமானவரித்துறை சோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் வசிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோரது பங்களாவில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சபரீசன் நண்பரின் அலுவலகம், திமுக எம்எல்ஏ மோகனின் மகன் வீடு என சென்னையில் மட்டும் மொத்தம் ஏழு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அப்போது ஸ்டாலின், இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் ரீதியாக தங்களைப் பலவீனப்படுத்த நடத்தப்படும் சோதனை என்றும் திமுக இதற்கெல்லாம் அஞ்சாது எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதேபோல ஐடி அதிகாரிகளுக்கு டீசல் பணம் தான் விரயம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, இதையெல்லாம் தாண்டி ஒருபடி சென்று தனது முகவரியை கூறி, ரெய்டு நடத்த வரும்படி சவால் விடுத்தார்.
இதையடுத்து, வருமானவரித் துறை சோதனையில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கியது.
சபரீசன் வீட்டில் கோடிக் கணக்கில் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வர தொடங்கியது. அது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வருமானவரி துறையினர் கொடுத்த ரசீது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் 500 ரூபாய் நோட்டுகள் 82, 200 ரூபாய் நோட்டுகள் 154, 100 ரூபாய் நோட்டுகள் 642 என மொத்தம் 1.36 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதையும் சபரீசனிடம் திருப்பி வழங்கிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சோதனையில் வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணமே கைப்பற்றப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.