கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது என ரஹ்மான் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ரஹ்மான் உருக்கம்
மார்க்ம் மாநகர மேயர், இந்திய கொன்சோல் அதிகாரி அபூர்வா ஶ்ரீவட்சவா மற்றும் கனேடிய மக்களுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். ரஹ்மான் என்ற பெயர் தமது பெயர் அல்ல எனவும் அது கருணையை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெயர் அமைதியையும், சுபீட்சத்தையும், நல்ல ஆரோக்கியத்த்தையும் கனேடிய மக்களுக்கு வழங்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இசை சமுத்திரத்தில் ஒர் துளி
இந்தியாவில் தன்னுடன் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி பாராட்டிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இசை சமுத்திரத்தில் தான் ஒர் துளி மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்கள் மூலம் தாம் இன்னமும் ஊக்கப்படுத்தப்படுவதாகவும் இன்னும் பொறுப்புக்கள் அதிகரிப்பதாகவும், களைப்படைந்தாலும் மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் எஞ்சியிருப்பதாக நினைவூட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.