மட்டக்களப்பிலுள்ள கிராமமொன்றின் பாடசாலை ஆசிரியரான ஜீவனேஸ்வரன் ஜீவன் சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்படுகின்றார்.இவர் தமது வகுப்புக்கு ஒரு வாரமாகப் பாடசாலை வரத்தவறிய மாணவனின் வீடு தேடிச் சென்று, காரணம் கேட்ட போது, முடி வெட்ட வில்லை, அதனால் பாடசாலை வரவில்லை என மாணவன் கூறியுள்ளார்.
அதோடு முடி வெட்டுவதானால் 20 கி.மீ தொலைவில் இருக்கும் மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்திலுள்ள சலூனுக்கு போகவேண்டும், அதற்கு வசதியும் இல்லை எனக் கூறினார்கள்.
பாடசாலை வருவதற்கு முடி ஒரு தடையா இருக்கக் கூடாது என்பதை உணர்ந்த ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் அவர்கள், தமது கடமைக்கு அப்பால், மாணவர்களுக்கு சிகை ஒப்பனையாளராக மாறி முடிவெட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆற்றிய மனித நேயப்பணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பலரும் கூறிவருகின்றனர்.
இதேவேளை தமிழர் பகுதியில் இப்படிப் பல பின்தங்கிய கிராமங்களில் முடி வெட்டிக் கொள்ள வசதி அற்று இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களால் உதவமுடியும் என குறிப்பிட்டுள்ள சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.