நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுக விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரின் மகன் ஆன கனகரத்தினம்(46) வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
தற்போது திருமயத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாசறைத் தலைவராக உள்ளார்.கடந்த 2016- ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று தனது சொந்த ஊரான கீரமங்கலம் சென்று தனது பெற்றோரை பார்த்துவிட்டு, பின்பு மீண்டும் இரு சக்கர வாகனத்தில், ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது ஆலங்குடி ஆயிப்பட்டி விலக்கு சாலை அருகே உள்ள பாலத்தில் மோதி விபத்தில் சிக்கினார்.
இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மரண செய்தி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.