யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.
அத்துடன் கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் தம்மிக்க பெரேரா நேற்று முதலாவது அமைச்சரவையில் கலந்துகொண்ட பின்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ், முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, கொழும்பு துறைமுக நகர், பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரை அண்டிய அபிவிருத்தித் திட்டம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், கொழும்பு தாமரைத்தடாக முகமைத்துவ நிறுவனம், டொக்னோ பார்க்க கம்பனி பிரைவட் லிமிட்டட் தகவல், தொழில்நுட்ப மையம், ஆகிய நிறுவனங்கள் குறித்த அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானியும் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதாகவும் அமைச்சர் தம்மிக்கப் பெரேரா குறிப்பிட்டார்.
இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிப்பதாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.