வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது பதவிப் பிரமாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இன்று மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் நாளை காலை 10:00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நரேந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அதேவேளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாக அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்றப் போவதில்லை என தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
தம்மிக பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் உயர் நீதிமன்றில் இதனை அறிவித்தார். மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற நிலையில் , ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.