இந்திய – மராட்டிய மாநிலத்தில் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மராட்டிய மாநிலம் மும்பையின் பஹன்அப் பகுதியில் டிரீம்ஸ் மால் என்ற வணிகவளாகக் கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தனியார் வைத்தியசாலை செயல்பட்டு வந்ததுள்ளது. இங்கு கொரோனா நோயாளிகள் உள்பட பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த வணிகவளாகக் கட்டிடத்தின் முதல்தளத்தில் நேற்று திடீரென தீ பற்றியது. தீ வேகமாக பரவியதால் அக்கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்த தனியார் வைத்தியசாலையிலும் தீ பரவியுள்ள நிலையில், இங்கு சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் உள்பட பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், குறித்த வைத்தியசாலையில் இருந்த ஊழியர்களும் நோயாளிகள் பலரை மீட்டனர்.
எனினும், இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கொரோனா நோயாளிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மராட்டிய முதல்மந்திரி உத்தவ் தாக்கரே வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த வைத்தியசாலை பகுதியை இன்று நேரில் ஆய்வு செய்த முதல்மந்திரி உத்தவ் தாக்கரே, இந்த சம்பவத்திற்கு காரணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.